தூத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு நகர் புற உள்ளாட்சிகளில் ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.98 கோடியில் புதைச்சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்படும். அதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மஞ்சள் நீர் கால்வாயில் ரூ.40 கோடியில் புதை சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சில மாநகராட்சிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சியில் சங்கலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம், தந்தை பெரியார் நகரில் உயர்நிலைப்பாலம், திருச்சியில் மாரிஸ் திரையரங்கம் அருகே ரயில்வே பாலம், ஈஸ்வரன் கோயில் பகுதியில் பாலம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதேபோல் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர் மாநகராட்சிகளிலும் ராமேஸ்வரம் நகராட்சியிலும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவை அனைத்திற்கும் ரூ.162.90 கோடி மதிப்பில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 159.90 கோடி நிதியானது உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளுக்கான நிதியில் இருந்தும் ரூ.3 கோடி ஆனது நகர்ப்புற உள்ளாட்சிப் பங்கில் இருந்தும் செலவிடப்படுகிறது.

அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக 24 புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதற்காக ரூ.302.50 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சில பேருந்து நிலையங்கள் கட்டப்பட இருக்கிறது. அதாவது ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் வடலூர், வேதாரண்யம், கூடலூர், அரியலூர், மேலூர், குளச்சல், பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் சிதம்பரம், திருவள்ளூர், மேட்டூர், ராமநாதபுரம், எடப்பாடி, உசிலம்பட்டி, ஆற்காடு போன்ற நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.