ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ஏராளமான தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்  தற்போது பெண்கள் அழகு நிலையங்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அழகு நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பல பெண்கள் வேலையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆண்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் பெண்கள் இது போன்ற அழகு நிலையங்களில் வேலைக்கு செல்ல துவங்கினர்.

ஆனால் இப்போது அவர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதால் மேக்கப் கலைஞர் ஒருவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வீட்டில் உள்ள ஆண்களுக்கு வேலை இருந்திருந்தால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம். ஆனால் அவர்களுக்கும் வேலை இல்லை. நாங்கள் இப்போது என்ன செய்ய முடியும். பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். இதை தான் அரசும் விரும்புகிறதா?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தொடர்ந்து போடும் கட்டுப்பாடுகளால் சர்வதேச அளவில் அந்நாட்டு  அரசு மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.