மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியாகி புதிய சரித்திரம் படைத்துள்ளார். இந்திய விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவனி சதுர்வேதிக்கு ஒரு அபூர்வ வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ஜப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து “வீர கார்டியன் 2023” என்னும் பெயரில் நடத்திய கூட்டுப் போர் பயிற்சியில் இவரும் பங்கேற்று சாதித்துள்ளார். கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 26 -ஆம் தேதி வரை இந்த கூட்டு போர் பயிற்சி ஜப்பானில் ஹயாகுரி விமானப்படை தளத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டதன் மூலமாக வெளிநாட்டில் நடைபெற்ற போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்னும் புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் இதில் வான் போர் சூழ்ச்சி இடைமறிப்பு மற்றும் வான் பாதுகாப்பு பணிகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு திரும்பி உள்ள அவனி சதுர்வேதி தனது அனுபவத்தை செய்தியாளரிடம் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பறக்கும் பயிற்சியில் அதுவும் வெளிநாட்டு விமான படையுடன் பயிற்சியில் ஈடுபடுவது என்பது எப்போதுமே நல்லதொரு அனுபவம் தான். ஏனென்றால் சர்வதேச பயிற்சியில் நான் ஈடுபட்டது இதுவே முதல் தடவை ஆகும்.

அனைத்து  இளைஞர்களுக்கும், ஆர்வமுள்ள பெண்களுக்கும் நான் கூற விரும்புவது, உங்களுக்கு வானம் தான் எல்லை. இந்திய விமானப்படை ஒரு அற்புதமான பணி வாய்ப்பினை தருகிறது. போர் விமானத்தில் பறப்பது என்பது உண்மையிலேயே மிகவும் பரவசமானது. இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஆர்வம் இருப்பவர்கள் உங்கள் கண்களில் அதை இலக்காக வைத்திருங்கள். அந்த இலக்கை நோக்கி உறுதியுடன் செல்லுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.