தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அதன் பின் ஊரகப் பள்ளிகளிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 17.53 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு ரூபாய் 600 கோடி காலை உணவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னரே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுபடி நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வரும் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நகரங்களில் உள்ள அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்.