தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு  அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அவருடைய தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு ஓ. பன்னீர் செல்வத்துக்கு நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் என்னதான் பிரச்சினையாக இருந்தாலும் இன்பம் மற்றும் துன்பங்களில் இது போன்ற மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது தவறான ஒரு முன் உதாரணமாகவே பார்க்கப்படுகிறது என்பது தான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.