சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. முதலமைச்சர் வீடு அமைந்துள்ள இடம் என்பதால் அப்பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மர்ம நபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த நபர் மது அருந்தி இருப்பதாகவும், மேலும் அவரது பையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது அந்த மர்ம நபர் மறைமலை பகுதியில்  வசித்து வரும் ஜான் என்பது தெரிய வந்தது. மேலும் தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த கத்தியை வீட்டு உபயோகத்திற்காக எடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் காவல்துறையினர் அவரை தங்களது பாதுகாப்பின் கீழ் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதலமைச்சரின் வீட்டின் அருகே சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.