மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள ராஜபாட்டின் வேதிக் வில்லேஜ் பகுதியை சேர்ந்தவர் சௌமிக் மஜுந்தார் (33). இவரது தாயார் தேவஜானி மஜுந்தார் (58). சௌமிக் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்ததால் தொடர்ந்து மன அழுத்தம், பல உளவியல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு சௌமிக் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தாயின் உடலோடு இருந்துள்ளார். அதன் பின் வெள்ளிக்கிழமை காலை ஒரு டீ கடைக்கு சென்று என் அம்மாவை நான் கொன்று விட்டேன். இரவு முழுக்க சாப்பிடவில்லை, சாப்பாடு ஏதாவது இருக்கிறதா? என கேட்டுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டீக்கடைக்காரர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தேவஜானி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலெங்கும் ரத்தம் பரவிய நிலையில் தேவஜானி கழுத்திலும், தோளிலும் பல குத்து வெட்டு காயங்களுடன் கிடந்தார். அவரது தலை முடி பின்புறமும் கடுமையாக தாக்கப்பட்டு இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் 12 மணிக்கு இடையே நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் சௌமிக்கை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவரது மனநிலை மிகுந்த குழப்பத்தில் இருந்ததை தெளிவாக காட்டியது. அவர் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வருவதால் மனநல சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததும், பண நெருக்கடியில் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தந்தை சௌபேந்திர மஜுந்தார் மரணத்தைத் தொடர்ந்து தாயுடன் வேதிக் வில்லேஜ் கிராமத்திற்கு வந்துள்ளார். முந்தைய காலத்தில் பிபிஓ நிறுவனத்தில் வேலை பார்த்த அவர் கடந்த ஒரு வருடமாக வேலை இழந்த நிலையில் மன அழுத்தத்தில் செய்வது அறியாது இவ்வாறு செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதன் பின் சௌமிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் . இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.