மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் தேசிய வங்கி ஒன்றின் கள அலுவலரின் மரணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையான பங்கஜ் ஷர்மா (33) என்பவர், கடந்த ஜூலை 25 ஆம் தேதி மினி கோல்டன் சன்ஸ்கார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், ஆகஸ்ட் 12 அன்று தனது மனைவி மற்றும் மகளை சந்திக்க மையத்தில் இருந்து தப்பியோடிய அவர், மைய நிர்வாகிகளால் மீண்டும் பிடிக்கப்பட்டார். அடுத்த நாள் மாலை, அவரது உடல்நிலை மோசமடைந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர், பங்கஜின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிரேத பரிசோதனையில், தலையில் மூன்று ஆபத்தான காயங்கள், விலா எலும்பு முறிவு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட 16 கடுமையான காயங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், மறுவாழ்வு மையத்தில் உள்ள சாட்சிகள், பங்கஜ் தப்பியோட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆடைகள் அகற்றப்பட்டு மணிக்கணக்கில் கொடூரமாக தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மையத்தின் இயக்குநர் விஷால் கன்கர், ஹர்ஷ் ஷிண்டே, ரவி தோமர், தர்மேந்திர ஜடவுன், கிருஷ்ண முராரி தீக்ஷித் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 4 பேர் தலைமறைவாக உள்ளனர். “பங்கஜின் மரணம் முதலிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையில், அவர் மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது,” என மகாராஜ்புரா காவல் உயர் அதிகாரி நாகேந்திர சிங் சிகர்வார் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
