இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் இந்து அறநிலையத்து துறை சார்பில்  திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்,  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது. அதற்காக கோவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கு  மேலே குறிப்பிடப்பட்ட 5 கோவில்களுக்கும் தலா மூன்று சிறப்பு அலுவலர்கள் இடம்பெற்ற கண்காணிப்பு குழு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரிகள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் இந்த கோவிலுக்கு சென்று, சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தும் பணிகளை மேற்கொள்வார்கள் என அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிவராத்திரி விழாவை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு மதிப்பெண்கள் வழங்க, ஒவ்வொரு கோவிலுக்கும் மூன்று அலுவலர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.