இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் ஷிகர் தவானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி நிறைவு செய்தது. இதற்கு முன் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்தது. தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு டீம் இந்தியா தயாராகி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முழு விளையாட்டுத் திட்டத்தையும் மாற்றியது. உலக கோப்பையில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றி பெற்ற டீம் இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து 3வது முறை சாம்பியனாகும் வாய்ப்பை இழந்தது. இந்த உலக கோப்பை அணியில் ஒரு வீரர் இடம்பெறவில்லை. அவர் பெயர் ஷிகர் தவான். தற்போது கிரிக்கெட் உலகில் இருந்து விலகி இருக்கும் தவானுக்கு இன்று 38வது பிறந்தநாள்.

டிசம்பர் 5ம் தேதி ஷிகர் தவானின் பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது தவான் கிரிக்கெட் உலகில் இருந்து விலகி சொந்த ஊரில் காலத்தை கழித்து வருகிறார். உலகக் கோப்பைக்கு முந்தைய சில தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆனால், அவரால் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லை.

38 வயதான ஷிகர் தவான் டீம் இந்தியாவுக்காக 2022 டிசம்பரில் தனது கடைசிப் போட்டியில் விளையாடினார். தவான் 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் இந்திய அணியின் நட்சத்திரமாக ஆனார். ஆனால், 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி நிர்வாகம் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டது. இளம் வீரர்கள் என்ட்ரி கிடைத்தவுடன் ஷிகர் தவான் ஓரங்கட்டப்பட்டார்.

அதன் பிறகு ஷிகர் தவான் சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். தனக்கு எந்தப் போட்டிகள் கிடைத்தாலும் இந்திய அணிக்கு தனது பங்களிப்பை வழங்கினார் தவான். 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதால் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை.

2010-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஷிகர் தவானுக்கு மிகவும் தாமதமாகத்தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அவரது அதிர்ஷ்டம் மாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித்தை எம்எஸ் தோனி தயார் செய்தார். அதன் பின்னர் 6-7 வருடங்கள் தொடர்ந்து டீம் இந்தியா சார்பாக சிறப்பாக செயல்பட்டார். ஷிகர் 167 ஒருநாள் போட்டிகளில் 45 சராசரியில் 17 சதங்கள் உட்பட 6793 ரன்கள் எடுத்துள்ளார்.

ஷிகர் ஒருநாள் போட்டிகள் தவிர்த்து 34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும் 7 சதங்களும் அடித்துள்ளார். ஷிகர் தவான் 68 டி20 போட்டிகளில் 1759 ரன்கள் எடுத்துள்ளார். 2018ல் டீம் இந்தியாவுக்காக கடைசி டெஸ்ட் போட்டியிலும், 2022ல் கடைசி ஒருநாள் போட்டியிலும், 2021ல் கடைசி டி20யிலும் விளையாடிய ஷிகர், தற்போது 38 வயதை கடந்துள்ளதால், அவர் டீம் இந்தியாவுக்கு திரும்புவது சந்தேகம்தான். விரைவில் ஓய்வை அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.