
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோலாபலூசா இந்தியா 2025 இசை விழாவில் கனேடிய பாடகரான ஷான் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியில் விராட் கோலியின் பெயரும், அவரது அடையாளமான 18 என்ற என்னும் இருந்ததால் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானார். கடந்த மார்ச் 8-ம் தேதி மும்பையில் மகாலட்சுமி ரேஸ்கோர்ஸில் நிகழ்ச்சி நடத்திய மெண்டிஸ் பாடலின் நடுவில் திடீரென கோலியின் ஜெர்சியை அணிந்து கொண்ட காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அவரின் ரசிகர்களுக்கும், இந்திய அணிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தியா- நியூசிலாந்து சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதால் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. “ஷான் மெண்டிஸ் விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து வருவதை காண்பது அருமையான தருணம்” என ஒரு பயனர் கூறியிருந்தார். மற்றொருவர் “2025 இல் ஷான் மெண்டிஸ் விராட் கோலியின் ஜெர்சி அணிவதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இது சூப்பராக உள்ளது” என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.