கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார்.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, கேஜிஎஃப் பட நடிகர் யாஷ், காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத் தலைவரும், முன்னணி தயாரிப்பாளருமான விஜய் கிர்கந்தூர், மறைந்த புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி மற்றும் யூடியூப்பர் ஆர்.ஜெ.ஷரத்தா போன்றோரை மோடி சந்தித்தார். அதுமட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்களும் பிரதமர் மோடியை சந்தித்தனர். கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் போன்றோரும் மோடியை சந்தித்தனர்.

இந்நிலையில் ஷரத்தா பிரதமரை சந்தித்த அனுபவம் பற்றி தன் டுவிட்டரில் பதிவில் “வணக்கம், ஆம் நான் நமது நாட்டின் பிரதமரை இன்று சந்தித்தேன். என்னை பார்த்து அவர் கூறிய முதல் வார்த்தை “ஐய்யோ”. என்னால் நம்ப முடியவில்லை. ஆகா… உண்மையிலேயே அவர் அதை தான் கூறினார். அது உண்மையிலேயே நடந்து விட்டது” என பதிவிட்டு உள்ளார். ஷரத்தாவின் மிக பிரபலமான வசனமும், அவரின் சமூகவலைதள பெயரும் “ஐய்யோ” என்பதாகும்.