தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது சட்டசபையில் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்ற ஒரு விதி இருக்கிறது. இதனை தளர்த்துவதற்கான தீர்மானத்தை துரைமுருகன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது யாரும் வெளிநடப்பு செய்யக்கூடாது என்பதற்காக வாக்கெடுப்பின்போது பேரவை கதவுகள் மூடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க அவர் ஆளுநர் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறிவிட்டார். இந்த தீர்மானத்திற்கு பாஜக கட்சியின் எம்எல்ஏக்கள் சரஸ்வதி மற்றும் காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து பேரவையில் ஆளுநருக்கு எதிராக விவாதிக்க கூடாது என்ற சட்டத்தை தளர்த்துவதற்கான தீர்மானத்திற்கு 144 பேர் ஒப்புதல் வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் அமலியில் ஈடுபட்டு ஏற்கனவே அவையை விட்டு வெளியேறி விட்டனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக இரண்டாவது முறையாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.