நடிகர் விஜய் செப்டம்பர் 17ல்  புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீப நாட்களாக விஜய் அரசியலில் நுழைய போகிறார் என்பதுதான் ஹாட் டாபிக். விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வருகை தர இருக்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்,

பல இடங்களில் வென்று தங்களது கணிசமான வெற்றியை  பதிவு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது. அதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் மதிப்பெண் வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது, கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று 234 தொகுதியிலும் இலவச இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கி வைத்தது என அனைத்தும் அவரது அரசியலுக்கான நகர்வாகவே கருதப்பட்டது.

அதேபோல் கல்வி விருது வழங்கும் விழாவில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை படித்து பின்பற்றும்படி அவர் அறிவுறுத்தியிருந்த நிலையில், காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்கியது போல், பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 இல் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் 2026 இல் நேரடியாக தேர்தல் களத்தில் நின்று முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் போட்டியிடப் போவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்நிலையில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து கேப்டன் விஜயகாந்த் போல் மாற நினைத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய் அவர்களை எச்சரித்துள்ளார். இப்படி விஜய் அவர்களின் அரசியல் வருகைக்கு ஆதரவாகவும், எதிரான மனநிலையிலும் தொடர்ந்து கருத்துக்கள் எழுந்து வண்ணம் உள்ளன.