அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 2 விமானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்த். இவர் தேனியில் உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில் உயிரிழந்த ஜெயந்தின் உடல் இன்று சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையோடு உடல் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலிக்காக ஜெயந்தின் உடல் வைக்கப்பட்டிருந்த போது மொத்த ஊரும் சேர்ந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது. ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் ஐ. சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஜெயந்தின் புகைப்படத்தை வைத்து இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.