புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், மோகன்ராஜ் ஆகியோர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து திடீரென இரண்டு மாணவர்களும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது, கொத்தமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை செவிலியர்கள் மூலம் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படும். இந்நிலையில் பள்ளியில் வைத்திருந்த இரும்பு சத்து மாத்திரைகளை இரண்டு மாணவர்களும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் சாப்பிட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர் என கூறியுள்ளனர்.