தெற்கு டெல்லியில் வசித்து வருபவர் கமல் ஆனந்த். இவர் சென்ற 2013-ம் வருடன் தன் மனைவியுடன்  சாகேத் பகுதியிலுள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆனந்தை அணுகிய பிரபல காபி நிறுவன ஊழியர், தங்களது கடையில் காபி வாங்கி பருகினால் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டாம் எனவும் கூப்பன் வாயிலாக பார்க்கிங் கட்டணத்தில் விலக்களிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்பின் ரூ.570 கொடுத்து ஆனந்த் இரண்டு காபி வாங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து காபி கடையில் கொடுத்த பில்லை காண்பித்து தனக்கு பார்க்கிங் கட்டணத்தில் விலக்கு அளிக்குமாறு கோரி உள்ளார்.

அதற்கு அந்த பார்க்கிங் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதோடு காபி நிறுவனம் தரப்பில் தங்களுக்கு இதுபோன்ற எந்த தகவலும் அளிக்கவில்லை என சொல்லி ரூ.60 பார்க்கிங் கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்த் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏறத்தாழ 10 வருடங்கள் இவ்வழக்கு குறித்த விசாரணை நடந்தது. இந்த நிலையில் அந்நிறுவனத்தை குற்றம் செய்ததாக நீதிபதிகள் அறிவித்ததோடு, சலுகையை மீறி ரூ.60 கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக 61 ஆயிரத்து 201 ரூபாயை ஆனந்திற்கு இழப்பீடாக வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.