மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலாசார மையம் திறக்கப்பட்டது முதல் 3 நாட்களுக்கு பல கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

அதிலும் குறிப்பாக அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர்களுக்காக விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பல வகையான உணவுகள் வெள்ளித் தட்டுகளில் வைத்து பரிமாறப்பட்டது. மேலும் ஒரு இனிப்பின் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் அந்த இனிப்பு ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்டிருந்தது.

அந்த உணவில் எதற்காக ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கின்றனர்? என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் அது உண்மையான ரூபாய் நோட்டுகள் இல்லை என தெரியவந்துள்ளது. அந்த இனிப்பின் பெயர் Daulat ki chaat ஆகும். இது டெல்லியில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை டெல்லியிலுள்ள உணவகம் ஒன்று போலியான ரூபாய் நோட்டுக்களுடன் பரிமாறி வருகிறது. அந்த வகையில் அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சியிலும் இனிப்பு ரூபாய் நோட்டுக்கள் உடன் பரிமாறப்பட்டதென தெரிகிறது.