
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் அனுப்புவது மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவது என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிஓ அதிகாரி என ஒருவர் 38 வயது நபருக்கு போன் செய்து மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 38 வயது நபர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர் உங்கள் வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகை நிலுவையில் உள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்தவில்லை என்றால் வாகனத்தில் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மிரட்டினார். அதோடு ரூ. 12,500-ஐ ஆன்லைனில் செலுத்தும் படி கட்டாயப்படுத்தி விட்டு தொடர்பை துண்டித்தார். இதை கேட்ட அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பின்னர் அவருக்கு ஏற்பட்ட பயத்தால் உடனடியாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தினார். அதன் பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் எந்த பதிலும் அளிக்கப்படாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மோசடி செய்து நபரை கண்டுபிடித்தனர்.
அவரது பெயர் ஆஷிஸ் சர்மா என்றும், அவர் ஏற்கனவே ஆர் டி ஓ அலுவலகத்தில் ஒரு தனியார் முகவராக பணியாற்றி இருக்கிறார். அப்போது அங்குள்ள பழைய வாகன பதிவு கோப்புகளை ரகசியமாக பயன்படுத்தி இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.