கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பிரபலமான பிரிஸ்டீஜ் சன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது வீட்டின் வாசலில் காலணி அலமாரி (ஷூ ரேக்) வைத்ததற்காக கடந்த 8 மாதங்களில் ரூ.24,000 அபராதமாக கட்டியுள்ள  சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் அவசர நிலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அடுக்கு மாடி குடியிருப்புகளின் காரிடார் பகுதிகளில் எந்தவொரு தனிப்பட்ட பொருட்களும் வைக்கக்கூடாது என்பது சட்ட விதிமுறைகளின் ஒரு பகுதியாகும். இதன்படி, அந்த குடியிருப்பு குழுமம், பொதுவான இடங்களில் காலணி அலமாரி, பூச்செடிகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை வைக்கப்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

அந்த அறிவுறுத்தலுக்குப் பிறகு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அவற்றை அகற்றினர். ஆனால், இருவர் மட்டும் விதிமுறைகளை மீறினர். இதில் ஒருவர் பின்னர் சம்மதித்து காலணி அலமாரியை அகற்றினார். மற்றொரு  இளைஞர் மட்டும், அதனை மாற்றாமல் அதற்கு பதிலாக கூட்டமைப்பிடம் ரூ.15,000 அபராதத்தையும், நாளொன்றுக்கு ரூ.100 வீதம் தொடர்ந்து செலுத்தியும் காலணி அலமாரியை வெளியேவே வைத்திருந்தார்.

தற்போது, அந்த இளைஞர் மொத்தம் ரூ.24,000 வரை அபராதம் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அபராதத் தொகையை ரூ.200 ஆக உயர்த்தும் முயற்சி கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அவர் ஒரே மாதத்தில் ரூ.6,000 வரை அபராதம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில்வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. “பொது இடங்களில் தனிப்பட்ட பொருட்களை வைக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்”, “இது தேவையற்ற ஆணவம்” என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம், அடுக்கு மாடி வாழ்வில் ஒழுங்கு மற்றும் சட்டத்தை பின்பற்றும் அவசியம் குறித்து முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.