பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு பகுதிகளையும் இணைக்கும் சாலையின் நடுவே மரங்கள் இருந்ததால் மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தது. அதற்கு வனத்துறை அந்த மரங்களை அகற்ற வேண்டுமென்றால் அதற்காக 14 எக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று பதில் கோரிக்கை விடுத்தது.

வனத்துறையினரின் இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால், சாலை அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 7 1/2 கிலோமீட்டர் தூரத்தில் மரங்களை அகற்றாமலேயே சாலை பணிகள் நிறைவடைந்தது. தற்போது அந்த சாலையின் நடுவே மரங்கள் இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பிருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக இப்பகுதியில் அதிக அளவு விபத்துக்கள் நடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையை நடுவே உள்ள மரங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதோடு அவ்வழியே செல்பவர்கள் ரூ.100 கோடியில் சாலை அமைத்தும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் சாலையின் நடுவே இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.