119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சராக யார் தேர்வாக போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால்  தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி அடுத்த முதலமைச்சர் ஆக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

மேலும் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம்  ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  துணை முதல்வராக பட்டி விக்ரமார்காவும்,  அவருடன் சேர்ந்து மொத்தம் 12 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

54 வயதான ரேவந்த் ரெட்டி கல்லூரி காலத்தில் ABVP அமைப்பிலும், பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். முன்னாள் முதலமைச்சர் சந்திர சேகராவுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்த அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவினுடைய காங்கிரஸின் முகமாக  அறியப்பட்டார். அவரை முன்னிறுத்தி தெலுங்கானாவில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அவர் தற்போது தெலுங்கானாவுடைய புதிய  முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.