ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல் போன் எண்ணை கேட்டும், பிரியாணி, பீர் போன்றவற்றை வாங்கித் தருமாறு சீனியர் மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பிரதீப்பை தொந்தரவு செய்ததாக அவர்கள் பெற்றோர் கூறியுள்ளனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் கூறியபோதும் அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து வெளியேறுவதற்காக பிரதீப்பின் டீசி கேட்ட போதும் கல்லூரி நிர்வாகம் தரம் மறுத்ததாக கூறுகின்றனர். மேலும் விடுதியில் தங்கி இருந்த பிரதீப்பை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகவும் தேர்வு எழுத விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் விடுமுறை காரணமாக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ராகிங் செய்த காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பிரதீபின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.