கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்டவர்கள் மாற்றி இடம் கொடுத்துவிட்டு வீடுகளை அகற்றிக் கொள்ளுமாறு கூறி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் 43 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தருவதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று பொதுமக்கள் ஆடு, மாடுகள், பாய், அடுப்புகள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் என பெட்டி, படுக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற தயாராக இருந்தனர். இதுகுறித்து அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மற்றும் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது தங்களுக்கு வீடுகள் ஒதுக்கியதற்கான உத்தரவு கடிதத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.