பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி ஆட்டமிழந்த கோபத்தில் தனது பேட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு பிஎஸ்எல் தொடரில் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் கலாண்டர்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. கேப்டனாக மட்டுமின்றி, பந்துவீச்சாளராகவும் அப்ரிடியால் இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில், லாகூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் உஸ்மான் தாரிக் வீசிய பந்தில் ஷாஹீன் அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமல் (டக்-அவுட்) ஆட்டமிழந்தார். தான் ஆட்டமிழந்ததை சற்றும் எதிர்பார்க்காத அப்ரிடி, மிகுந்த கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பவுண்டரி கோட்டைக் கடக்கும்போது தனது பேட்டை தரையில் ஓங்கி அடித்த அவர், அதோடு நிற்காமல் டிரெஸ்ஸிங் ரூம் படிக்கட்டுகளிலும் பேட்டை ஆவேசமாக அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shaheen Afridi after getting out angrily 😤🔥 pic.twitter.com/opnRTHMo6A
— Ahtasham Riaz (@ahtashamriaz22) April 17, 2026
இந்தப் போட்டியில் லாகூர் கலாண்டர்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பி, வெறும் 34 ரன்களுக்குச் சுருண்டது. உஸ்மான் தாரிக் சிறப்பாகப் பந்துவீசி அப்ரிடி, சிக்கந்தர் ரசா உட்பட 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 35 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
லாகூர் அணி 4 தோல்விகளுடன் தத்தளித்து வரும் நிலையில், பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் (ஒரு போட்டி மழையினால் ரத்து) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும் முன்னணி வீரராகவும் கேப்டனாகவும் இருக்கும் அப்ரிடி, மைதானத்தில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
