வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு வித்தியாசமான கைப்பையுடன் வந்துள்ளார். இந்த கைப்பையில் பாலஸ்தீனத்தின் பெயர் மற்றும் அந்நாட்டின் சின்னமான தர்பூசணி, நிறம் ஆகியவை பொறிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது இணைய பக்கத்தில், பிரியங்கா காந்தி கைப்பையுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில், இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் இன்று வரை 45, 028 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படுகொலையில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா கூறுகிறது.

ஆனால் சர்வதேச நாடுகள் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும், உலகம் எங்கிலும் பாலஸ்தீன போருக்கு எதிராக குரல் கொடுத்தும், போர் மட்டும் நின்ற பாடில்லை. இந்த வகையில் பிரியங்கா காந்தியும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அந்நாட்டின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் பாராளுமன்றத்திற்கு வந்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் எனக் கூறியிருந்தார். மேலும் பிரியங்கா காந்தியும் தனது இணையதள பக்கத்தில், பாலஸ்தீனத்தில் உள்ளபெண்கள், குழந்தைகள், மூத்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது மட்டும் தீர்வாகாது.

இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை கண்டிக்கும் வகையில் அனைவருமே ஒன்றிணைந்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அழுத்தம் தர வேண்டும். இதுவே ஒவ்வொரு மனிதனின் தார்மீக பொறுப்பாகும் என பிரியங்கா காந்தியும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இது குறித்து பாஜக, முஸ்லிம் பொதுமக்களை திருப்திப்படுத்தும் விதமாக பிரியங்கா காந்தி இவ்வாறு செய்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளது.