கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை கிடைக்கும் என கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து தேக்கம்பட்டி பகுதியில் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்று காண்பித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் 2016-ஆம் ஆண்டு முழுமையான பணத்தை செலுத்தி முடித்துவிட்டு வீட்டு மனையை கிரையம் செய்து தரும்படி ரியல் எஸ்டேட் நிறுவன அதிபரிடம் கேட்டோம்.

அவர் கிரயம் செய்து தருவதாக கூறி பத்திரத்திற்கான தொகையையும் வாங்கிக் கொண்டார். ஆனால் கூறியபடி வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் இது குறித்து கேட்கும் போதெல்லாம் வீட்டுமனைக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறி காலம் தாழ்த்தினார். அதன் பிறகு நாங்கள் கட்டிய பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்து விட்டார். அவரிடம் பலர் 2 லட்ச ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் வரை பணம் கட்டி உள்ளோம். அதற்கான ரசீது இருக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு குறிப்பிட்டுள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.