கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுவள்ளி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமா பரமேஸ்வரன்(60) நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சித்ரா டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இதனை அறிந்த பரமேஸ்வரன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிவிடலாம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி சித்ரா உள்பட அவரது உறவினர்கள் 4 பேர் பல்வேறு தவணையாக பரமேஸ்வரனுக்கு 29 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர்.

ஆனால் கூறியபடி அவர் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சித்ரா பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பரமேஸ்வரன் பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பரமேஸ்வரன் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவருக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி சுகாசினி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.