சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு ஜனகவள்ளி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜனகவள்ளியை புளியந்தோப்பு மகப்பேறு மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால் ஜனகவள்ளி சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனகவள்ளி பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததுதான் இளம்பெண் மற்றும் அவரது குழந்தை இறந்ததற்கு காரணம் என குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் ஜனகவள்ளியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.