கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் தனியார் மில் நிறுவன ஊழியரான ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் உள்ளிட்ட சிலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் சமூக வலைதளம் மூலம் எங்களுக்கு அறிமுகமானார்.

அவர் தங்கத்தில் முதலீடு செய்தால் 28 மாதத்தில் 24 லட்ச ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். மேலும் குறைந்தபட்சம் 10 கிராம் தங்க நகை வாங்க வேண்டும், அப்படி இல்லை என்றால் 8000 ரூபாய் செலுத்தி மற்றவர்களை இந்த திட்டத்தில் சேர்த்து விட்டால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி பலர் 8000 ரூபாய் செலுத்தினோம்.

ஒரு சிலருக்கு மட்டுமே அவர் கூறியபடி லாபத்தொகை கிடைத்தது. ஆனால் பலருக்கு அவர் லாபத்தொகை வழங்காமல், கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.