சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார். இவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் எனவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி தேன்மொழி மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 9 பேர் வேலைக்காக சுதாகரனிடம் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பல்வேறு தவணைகளாக கொடுத்தனர்.

இதனையடுத்து சுதாகரன் அவர்களுக்கு போலியான பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். அது போலியானது என்பதை அறிந்த தேன்மொழி உள்ளிட்ட 10 பேரும் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் சுதாகரன், அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தேன்மொழி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான சுதாகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.