கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் இன்ஜினியரான புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் பிரபல நிறுவனத்திற்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டால் ஊக்கத்தொகை கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை புவனேஸ்வரி தொடர்பு கொண்டு பேசியபோது ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அதன்படி ஆயிரம் ரூபாய் செலுத்தியவுடன் புவனேஸ்வரிக்கு 1480 ரூபாய் திரும்ப கிடைத்தது. இதனை நம்பி புவனேஸ்வரி பல்வேறு கட்டங்களாக 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.