கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், கானாப்புரா தாலுகாவில் உள்ள நந்தகடா போலீஸ் எல்லைக்குட்பட்ட பீதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு ஆனந்த்ராஜ் நேற்று முன்தினம் இரவு சென்றார். அங்கு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை சரமாரியாகக் குத்தி கொலை செய்தார்.

பின்னர், அதே கத்தியால் தன்னைத்தானே குத்தி ஆனந்த்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நந்தகடா போலீசார், மஞ்சுளா மற்றும் ஆனந்த்ராஜின் உடல்களைக் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரும் திருமணமானவர்கள் என்றாலும், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் கள்ளக்காதல் உருவாகியிருந்தது. இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ஏற்கனவே நந்தகடா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, போலீசார் ஆனந்த்ராஜை அழைத்து எச்சரித்திருந்தனர். இதனால் மனமுடைந்த ஆனந்த்ராஜ், தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நந்தகடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.