தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதனையடுத்து  பெரு நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தவும், நாடாளுமன்றத்தை கலைத்து, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாக பெட்ரோ காஸ்டிலோ அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால்  அந்நாட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எம்.பி.க்கள் அதிபரின் இந்த முடிவை நிராகரித்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, அவரது பதவியை பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக எம்.பி.க்கள் அதிகமானோர் ஓட்டு போட்டதால் பெட்ரோ காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்து மற்றும் சதி திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்டார். இதன்பின் 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே என்பவர் அவருக்கு பதிலாக அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் காஸ்டிலோ தன்னை காவலில் இருந்து விடுவிப்பதற்காக பெரு நாட்டு நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்ததால் அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பெருநாட்டின் பல்வேறு இடங்கள்  போராட்டக்களமாக காட்சியளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் லிமாவில் அவருடைய ஆதரவாளர்கள் இணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்தியும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் உள்ளனர். இதனால் பெருநாட்டில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.