பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அதே ஆசிரியர் மீண்டும் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் படி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதை தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.