கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று காலை தர்மபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் சவுளூர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த திரு.முனுசாமி, த/பெ.ஊமையன் (வயது 55), திருமதி மல்லி (வயது 50), திருமதி வசந்தி, க/பெ.சின்னசாமி (வயது 45), திரு.முத்து, த/பெ.சின்னசாமி (வயது 22) மற்றும் வர்ஷினி, த/பெ. சதீஷ் (3 மாத குழந்தை) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இச்சம்பவத்தில் கடும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.