இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் ஒரு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இந்நிலையில் தற்போது டெலிகிராம் மோசடியும் ஆரம்பித்துவிட்டது. அதாவது கோவையைச் சேர்ந்த விஜயகுமார் (40) என்பவரின் செல்போனுக்கு டெலிகிராமில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக இருந்ததால் அவர் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

அப்போது மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் ஒருவர் ஹோட்டல் பற்றி விரிவாக கூறினால் நல்ல தொகை லாபமாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஆன்லைனில் அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து விஜயகுமாருக்கு முதலில் 858 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. அதன் பிறகு அவர் 10,500 ரூபாயை முதலீடு செய்ய கமிஷனுடன் சேர்த்து 17,948 ரூபாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து 38,686 ரூபாயை அவர் முதலீடு செய்ய அவர்கள் லாபமாக 51,015 ரூபாய் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 7.24 லட்சம் ரூபாயை விஜயகுமார் செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த கமிஷனும் வரவில்லை. இதற்கு முன்பு கிடைத்த கமிஷன் தொகையையும் விஜயகுமார் எடுக்க முடியவில்லை. இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இது போன்ற சைபர் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.