
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நகர்ப்புறத்தில் வீடுகள் அல்லாதவர்களுக்கு தங்கும் இடம் உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,”தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதனால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. இலவச அறிவிப்புகள் மூலம் ஒரு ஒட்டுண்ணி வர்க்கம் உருவாக்கப்படுகிறதா? என வியப்படைய வைக்கிறது.
மேலும் நாட்டின் வளர்ச்சி பங்களிப்பிற்கு ஒரு முக்கிய பகுதியாக அவர்களை ஊக்குவிக்காமல் ஒட்டுண்ணி வர்க்கத்தை நாம் உருவாக்குகிறோமா? எனவும் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பெண்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்டு தொகையை ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. டெல்லி தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதம் தரும் 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியினரும் பெண்களுக்கு மாதம்தோறும் 2,100 வழங்கப்படும் என அறிவித்தனர்.
தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் இலவசங்கள், பெண்களுக்கு வழங்கப்படும் மாதந்தோறும் ஊக்கத்தொகை மற்றும் பிற இலவசங்கள் போன்றவற்றால் மக்கள் வேலைக்கு செல்ல தயாராக இல்லை. இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் எந்த விதமான வேலையும் செய்யாமல் பணத்தையும் பெற்று வருகிறார்கள் என நீதிபதி கவாய் கருத்து தெரிவித்தார். மக்கள் மீதான கவலையை பாராட்டுகிறோம் ஆனால் நாட்டு வளர்ச்சிக்காக சமூகத்தில் ஒரு முக்கிய பகுதியாக அவர்களது பங்களிப்பு இருக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது வழக்கின் மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியதாவது, “அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலைக்கு செல்லாமல் இருக்க விரும்ப மாட்டார்கள்” என பதிலளித்தார். இதற்கு நீதிபதி கவாய்,”வழக்கறிஞர் ஒரு பக்க அறிவை மட்டுமே பார்க்கிறார். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால் விவசாய வேலைக்கு ஆட்கள் செல்வதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.