காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக இருந்த நிலையில் அந்த ஏழு மாத ஆண் குழந்தை கீழே கிடந்த ஒன்றரை இன்ச் அகலம் கொண்ட பிரபல தைல டப்பாவை வாயில் போட்டுள்ளது. வாயில் போட்ட டப்பாவை வெளியே துப்ப தெரியாமல் தவித்து வந்தது.

இதனால் மீண்டும் அதனை முழுங்க முயற்சித்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக டப்பா தொண்டையில் சிக்கி குழந்தைக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தை ரத்த ரத்தமாக வாந்தி எடுத்துள்ளது. இதனை கவனித்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு அருகில் உள்ள காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளர்.

அங்கு குழந்தையின் நிலைமை மிகவும் மோசமானதை கருத்தில் கொண்டு மகப்பேறு சிறப்பு மருத்துவர் பாலாஜி மற்றும் தொண்டை மூக்கு வாய் மருத்துவர் மணிமாலா ஆகியோர் இணைந்து குரல்வளைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் டப்பாவை வெளியே எடுத்தனர். தக்க சமயத்தில் மருத்துவர்கள் செய்த சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. மேலும் அந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்தும் வருகின்றனர்.

அறுவை சிகிச்சை ஏதுமின்றி குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் மருத்துவர்கள் குழந்தையின் அருகே இந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.