புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பம், குளிர், மலை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்புயல் காரணமாக அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும் பனிபுயலினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தம் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வீசி வரும் பயங்கரமான பனிப்புயல் அம்மாகாணத்தையே புரட்டி போட்டுள்ளது. அதோடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் மோசமாக பாதித்துள்ளது.
இந்த பனிப்புயல் மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால் பனிப்பொழிவும் பலத்த மழையும் பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் பனி துகள்கள் பல அடி தூர உயரத்திற்கு குவிந்தும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் ரயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து இருப்பதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி புயலினால் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர். இந்த பனிப்புயலால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.