டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி ஒரு அணிக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மழையால் தாமதமாக டாஸ் போடப்பட்டது. போட்டியும் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் களமிறங்கி ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இது செய் அல்லது மடி போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். அதனால் தோற்கும் அணியின் பயணம் இத்துடன் முடிவடையும்.

பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் 5 மாற்றங்கள் :

இலங்கைக்கு எதிரான  போட்டியில் பாகிஸ்தான் அணி 5 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் மற்றும் பகீம் அஷ்ரப் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள். நசீம் ஷா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜமான் கான் அணியில் இணைந்துள்ளார்.

இந்த முக்கியமான போட்டிக்காக, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹரிஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் ஜூனியர், வேகப்பந்து வீச்சாளர் ஜமான் கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.  இதற்கிடையே பயிற்சியின் போது இமாம் உல் ஹக்கிற்கு  முதுகுபிடிப்பு ஏற்பட்டதால் அவர் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அப்துல்லா ஷபீக் சேர்க்கப்பட்டுள்ளார். சவுத் ஷகீல் காய்ச்சலால் வெளியேறியுள்ள நிலையில், ஃபக்கர் ஜமான் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். நேற்று அறிவிக்கப்பட்டபோது பக்கர் ஜமான் இடம்பெறவில்லை.

இலங்கையில் இரண்டு மாற்றங்கள். திமுத் கருணாரத்னவுக்காக குஷால் பெரேராவும், கசுன் ராஜிதவுக்காக பிரமோத் மதுஷனும் களமிறங்குகின்றனர்.

இதனிடையே மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

செப்டம்பர் 10 ஞாயிறு முதல் செவ்வாய் 12 வரை 3 நாட்களில் ஆர் பிரேமதாச மைதானத்தில் மழையும் போட்டியில்  கலந்து கொண்டது. இப்போது மழையால் பாகிஸ்தான் இலங்கை போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், நிகர ரன் ரேட்டின் பலத்தில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே, இந்தப் போட்டியில் மழை வந்தால், பாகிஸ்தான் வீட்டுக்கு போக வேண்டியது தான்..

பாகிஸ்தான் பிளேயிங் லெவன் :

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபக்கர் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஜமான் கான்.

இலங்கை அணியின் பிளேயிங் லெவன் :

தசுன் சானகா (கேப்டன்), குசல் மெண்டிஸ் , பதும் நிசாங்கா, குஷால் பெரேரா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதிர சமரவிக்ரம, மகேஷ் திக்ஷன, துனித் வெலலகே, மதிஷா பத்திரனா, மதுஷன்.