சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூரில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதனை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே திருப்புவனம் பாக்யா நகரில் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அது அப்பாஸுக்கு சொந்தமானது என்பதும், என்ஜின் பழுதாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மெக்கானிக் மூலம் என்ஜின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த என்ஜின் மானாமதுரையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

ஆனந்தன் ஆட்டோவை திருடி அதில் இருக்கும் என்ஜின், டயர்களை கழற்றி தன் ஆட்டோவில் பொருத்தியதாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டார். சாலையோரம் நின்ற அப்பாஸின் ஆட்டோவை யாருக்கும் தெரியாமல் திருடி என்ஜின் மற்றும் தேவையான உபகரணங்களை கழற்றி எடுத்து தனது ஆட்டோவில் பொருத்திவிட்டு பழுதான டயர் மற்றும் உபகரணங்களை கழற்றி திருடி வந்த ஆட்டோவில் பொருத்தி அதே பகுதியில் நிறுத்தி உள்ளார். இதனால் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.