சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதனால் வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த மோதலில் கொடுங்கையூரைச் சேர்ந்த விஜய், முத்து ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோதலில் ஈடுபட்டதாக கார்த்திக், தமிழ் அன்சாரி, இம்ரான், சுந்தர் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.