இந்தியாவில் வட மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பசுவின் சிறுநீரை குடிக்கும் பழக்கம் பொது மக்களிடம் இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் சில மூடநம்பிக்கைகளின் காரணமாக பசுவின் சிறுநீரை குடிக்கிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பசுவின் சிறுநீரை மனிதன் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல உடல் நலத்தோடு இருக்கும் பசு மற்றும் எருமை மாடுகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அதன் சிறுநீரில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 விதமான பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவித்து வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகளை ஏற்படுகிறது. பசுவின் சிறுநீரை விட எருமை மாட்டின் சிறுநீரில் தான் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருக்கிறதாம். எந்த ஒரு வகையிலும் மனிதன் பசு மற்றும் எருமை மாட்டின் சிறுநீரை குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கப் படவில்லை எனவும் ஆய்வில் கூறியுள்ளனர். மேலும் இந்தியாவில் பசுவின் சிறுநீர் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.