ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான நிலங்களுக்கான உரிமையாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அறியப்படாமல் இருக்கிறது. இவை புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் எங்களுக்கே அந்த நிலங்களின் பட்டாக்களை தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கு முந்தைய அரசு செவி சாய்க்காத நிலையில் தற்போது ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 12 வருடங்களுக்கு மேல் அந்த நிலத்தை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு அதன் பட்டாவை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2.06 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான பட்டாக்களை ஒரு லட்சம் விவசாயிகளிடம் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி வழங்கியுள்ளார். மேலும் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு பட்டாக்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார்.