
இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் 18 இடங்களில் தங்க இருப்புகள் உள்ளதை சமீபத்திய புவியியல் ஆய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் மாநில புவியியல் துறை ஆகியவை இணைந்து நடத்திய ஒரு விரிவான ஆய்வில் ஒடிசாவில் உள்ள கியூஞ்சர், மயிர்பஞ்ச், சுந்தர்கர், கோராபுட், மல்கங்கிரி, நபரங்பூர் மற்றும் அங்குல் ஆகிய பகுதிகளில் கனிம வளங்களின் இருப்பு அதிகமாக உள்ளது தெரியவந்தது. இதில் மிக முக்கியமாக கியோஞ்சர் மாவட்டத்தில் உயர்தர பிளாட்டின படிவுகளும்கண்டறியப்பட்டுள்ளது.
பழங்கால ஆய்வு கணிப்புகள் தங்க இருப்புகளை குறிப்பிட்டிருந்தாலும் சமீபத்திய தொழில்நுட்பம் முன்னேற்றங்களில் கடந்த 2021- 22 இல் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளில் தங்க இருப்புகளின் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒடிசா சட்டமன்றத்தில் எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் விபூதி புஷன் ஜனா தியோகர், டியோகர் மாவட்டத்தில் தாமிர சுரங்கத்திற்காக நடத்தப்பட்ட ஆய்வில் தங்கமும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். எனவே இந்த பிளாக்கை ஏலத்தில் விடுவதற்கான ஆயத்த பணிகளை அரசு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1,685 கிலோகிராம் தங்கத்தாது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம் ஒடிசா பொருளாதாரத்தில் மேம்படுவது மட்டுமல்லாமல் இந்தியாவின் தங்க இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வாய்ப்பு உருவாகும் என தெரிவித்திருந்தார்.
இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்வதாகவும், ஆனால் உள்ளூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் அளவு வெறும் 1.6 மெட்ரிக் டன் மட்டுமே. எனவே ஒடிசாவில் தங்க சுரங்கங்கள் இந்தியாவின் தங்க இறக்குமதியை குறைக்கும் என தெரிவித்துள்ளனர். வரும் 2025 இறுதியில் இது குறித்த ஆய்வு பரிசோதனைகள் முழுமையாக முடிவுக்கு வரும் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.