அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வாலி பகுதியில், சனிக்கிழமை பிற்பகலில் ஒரு சிறிய தனியார் விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில், விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வீடுகளில் மக்கள் இருந்திருந்த போதிலும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Van’s RV-10 எனப்படும் இந்த விமானம், சிறிய  வகையைச் சேர்ந்தது. வீடுகளுக்கு இடையே விழுந்த இந்த விமானத்தின் பல பாகங்கள் முறிந்து சிதறிய நிலையில் காணப்பட்டன. தீவிரமான தீப்பிடிப்பும் ஏற்பட்டதால், 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டின் மேல் பகுதியில் புகை மூட்டம் காணப்பட்ட நிலையில் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.