பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் கெமாரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுவர்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி  அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10-ம் தேதியிலிருந்து 25-ஆம் தேதி வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்  உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களாகும்.

அதேபோல் மூன்று சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர். அதில் காய்ச்சல், மூச்சு திணறல் மற்றும் தொண்டை வீக்கம் இருப்பதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவலில் சில ரசாயனங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தது என சிந்து மாகாணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த கிராமத்தில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக அந்த பகுதி மக்கள் முன்பு குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறி அதன் காரணமாக மக்கள் உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.