ஐரோப்பாவில் கடந்த  2008 முதல் 2015 வரை, 8 நாடுகளில் ஒரே விந்தணு தானதாரரால் 67 குழந்தைகள் கருத்தரிக்கப்பட்டுள்ளனர். அந்த நன்கொடையாளரிடம் TP53 என்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணு மாற்றம் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 23 குழந்தைகள் தற்போது அந்த மரபணுவை ஏற்றுள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சில குழந்தைகள் லுகேமியா, ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா போன்ற ஆபத்தான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரு குடும்பங்கள் அவர்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக மருத்துவமனைகளை அணுகியபின் தான் இந்த விவரம் வெளியே தெரியவந்தது. இதனால் அந்த தானதாரர் மூலம் பிறந்த மற்ற  குழந்தைகளையும் கண்டறிந்து, அவர்களுக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “ஒரே நன்கொடையாளரால் அதிகபட்சம் 75 குழந்தைகள் பிறக்கக்கூடாது” என கூறியுள்ளார். தற்போது அந்த தானதாரர் மூலம்  பிறந்த குழந்தைகளுக்கு, முழு உடல் மற்றும் மூளை எம்ஆர்ஐ ஸ்கேன், மார்பகம், வயிற்று அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய விந்தணு வங்கியினர், இந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளனர். அதோடு எதிர்காலத்தில் நன்கொடையாளர்களுக்கு சர்வதேச அளவில் கட்டுப்பாடு தேவை என வலியுறுத்துகின்றனர்.