நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வருடந்தோறும் கோடை விழா நடத்தி வருகிறது.

அதாவது ஊட்டியில் அமைந்துள்ள “ஊட்டி ரோஜா பூங்கா”வில் இன்று 20 வது ரோஜா கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதில் அரசு கொறடா ராமச்சந்திரன், ஆ ராசா எம்பி, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற அந்த கண்காட்சியின் போது பூங்காவின் நுழைவு வாயிலில் வண்ண பூக்களை கொண்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளின் கண்களை கவர்ந்தது. பூங்காவினுள் 20 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு டால்பின் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதோடு சிற்பி, மீன், பென்குயின், நத்தை, வண்ணத்துப்பூச்சி வடிவங்கள் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குடில் டால்பின் போன்றவற்றின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியில் ரோஜா இதழ்களை கொண்டு ரங்கோலி வரையப்பட்டிருந்தது. மேலும் 4000 ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியதை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.